தமிழகம், புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 94 புள்ளி பூஜ்யம் மூன்று சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96 புள்ளி மூன்று எட்டு சதவீதமும், மாணவர்கள் 91 புள்ளி நான்கு ஐந்து சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமான நிலையில், வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகள் 4 புள்ளி ஒன்பது மூன்று சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 89 புள்ளி எட்டு பூஜ்யம் சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95 புள்ளி ஒன்பது ஒன்பது சதவீதம் தேர்ச்சியும், தனியார் சுயநிதி பள்ளிகளில் 99 புள்ளி பூஜ்யம் எட்டு சதவீதம் தேர்ச்சியும் அடைந்துள்ளனர். இதில் 326 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள் 4 ஆயிரத்து 398பேர் எழுதியதில் 3ஆயிரத்து 923 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிறைவாசிகள் 90பேர் தேர்வு எழுதியதில் 79பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வர தாமதமானதால் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு பின்னரே காலதாமதமாக வெளியிடப்பட்டன.