2 ஏக்கர் நிலம் தருவதாக திமுக அளித்த வாக்குறுதி என்னவானது?

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதியின் மூலம், எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டது என்று சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வேளாண்த்துறை அமைச்சரை போல் தங்களுக்கு வித்தை காட்டத் தெரியாது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதியோர் உதவித் தொகை பெற தகுதியானவர்களை கண்டறிந்து, உதவித் தொகை வழங்கியது அதிமுக அரசு என்று தெரிவித்தார். திமுக ஆட்சியை காட்டிலும், அதிமுக ஆட்சியில் 60 சதவீதம் அதிமாக முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டதாக அவர் கூறினார். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளுக்கு தான் அதிக நேரம் வழங்கியதாக சபாநாயகரே தெரிவித்ததையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காடினார். திமுக ஆட்சியில், நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, எத்தனை பேருக்கு நிலம் வழங்கப்பட்டது என்றும் பேரவையில் அவர் கேள்வி எழுப்பினார். அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது, பின்வாங்கும் செயல் என அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதேபோல், பேரவையில் பேசிய கிணத்துக்கடவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், விவசாயிகளை உத்வேகப்படுத்தும் புதிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என கூறினார். இதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 100 நாட்களில் வித்தை காட்டுகிறோம் என்றார். இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்துறை அமைச்சரை போல் தங்களுக்கு வித்தை காட்ட தெரியாது என விமர்சித்தார்.

 

Exit mobile version