வரும் இரண்டு வாரங்களுக்கு 6 மணிநேரம் சுத்தம் செய்யும் பணியில் மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என்று பணியாளர் துறை தெரிவித்துள்ளது.
‘ஸ்வச்தா ஹி சேவா’ என்ற இயக்கத்தை கடந்த 15ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தைப் தொடங்கி வரும் அக்டோபர் 2ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி, ‘ஸ்வச்தா ஹி சேவா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை, பணியில் ஈடுபட செய்வதாகும்.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் வாரியம் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், அனைத்துத்துறைகளிலும், அமைச்சகங்களின் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அலுவலகங்கள், அலுவலக வளாகங்கள்,குடியிருப்புகள், பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவற்றை அரசு ஊழியர்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதில், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மட்டும் ஈடுபடாமல், அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் குறைந்தபட்சம் அடுத்த 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.