2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் இல்லை – தமிழக அரசு

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச் சுமையை குறைக்கக் கோரி, வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கத் தடை விதித்துப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், தமிழகத்தில் மாநில பாட திட்டப் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

Exit mobile version