16 -வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவிற்கு மிகுந்த வரவேற்பு

சென்னையில் நடைபெற்று வரும் 16-வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

16-வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 13-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா உட்பட பல சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி , அண்ணா , கேசினோ திரையங்கம் ஆகியவற்றில் படங்கள் திரையிடப்படுகின்றன.

ஒரு வார காலம் நடக்கும் இந்த திரைப்பட திருவிழாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. திரையரங்குகளில் வெளிநாட்டு படங்களை காண அளவுக்கு அதிகமான கூட்டம் வருகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் படத்தை காண வருகின்றனர்.

இதனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெளிநாட்டு திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. திரைப்பட கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பு மாணவர்கள் , ஊடகத்துறை மாணவர்கள், இளைஞர்கள் , பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் படங்களை பார்த்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு ஒவ்வொரு திரையரங்குகளிலும் 4 முதல் 5 காட்சிகள் வரை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வட சென்னை , இரும்புத்திரை போன்ற தமிழ் சிறப்புத் திரைப்படங்கள் , குறும்படங்களும் திரைப்படுகின்றன. வெளிநாட்டு திரைப்படங்களை பார்ப்பதன் மூலம் உலக சினிமாவை புரிந்து கொள்ள முடிவதாகவும், திரைப்படம் எடுக்க நினைப்பவர்களுக்கு ஓர் பாடமாக இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அமைவதாக கவுல்சல்யா என்ற மாணவி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தலைமையிடமாக உள்ள சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துவதால் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றிகரமாக 16-வது திரைப்பட திருவிழா நடைபெறுகிறது. தமிழக அரசின் உதவியோடு இந்த திரைப்பட திருவிழா நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version