உலகிலேயே மிகவும் பரிசுத்தமானதும் ஆரோக்கியமானதும் தாய்ப்பால்தான். அதனால் தான் குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சில தாய்மார்கள் ஒரு சில காரணங்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு
மட்டுமல்லாமல், தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கிறார்.
அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவருக்கு, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பால் சுரப்பு இருந்திருக்கிறது. அதாவது நாளொன்றுக்கு சுமார் ஆறரை லிட்டர் தாய்ப்பால் இவரது உடலில் உற்பத்தியாகி இருக்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.
இதனால் தனக்கு சுரக்கும் தாய்ப்பால் வீணாகிப் போவதை விரும்பாத எலிசபெத், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசியாற்ற முடிவு செய்தார். அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார். இவரின் இந்த செயல் குறைமாதத்தில் பிறந்த பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவியாக இருந்திருக்கிறது. இதனால் தாய்ப்பால் தெய்வம் என்றும் எலிசபெத்தை அழைக்கிறார்கள்.
கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஆயிரத்து 599 லிட்டர் தாய்ப்பாலை, ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தனக்கு ஏற்பட்ட ஒரு குறையை பற்றி கவலைப்படாமல், அதை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்..
– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.
Discussion about this post