ஜெராக்ஸ் எடுக்க வரும் பொதுமக்களின் ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி போலி கடவுச் சீட்டுகளை தயாரித்தது குறித்து க்யூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு கும்பல் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து விற்பதாக க்யூ பிரிவு போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கிய குற்றவாளிகளைத் தேடி வந்த காவல்துறையினர் சென்னையில் பதுங்கியிருந்த அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் இலங்கைத் தமிழர்கள் என்று தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெராக்ஸ் கடையில் வேலை பார்ப்பவர்களின் உதவியுடன் பொதுமக்களின் அடையாள அட்டைகளை ரகசியமாக நகல் எடுத்து போலி பாஸ்போர்ட் தயாரித்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.