தமிழகத்தில் 16 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்

அமெரிக்காவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்திற்கு 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

லண்டன் பயணத்தை முடித்து, தற்போது அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் நகரில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். 200க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், தமிழகத்தில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்துக்கூறினார். அமெரிக்க நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அதிகளாவில் முதலீடு செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடந்த இந்தக் கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் 16 நிறுவனங்கள் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version