சென்னை வியாசர்பாடியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலின் தெப்பக்குளம் மற்றும் அன்னதானக் கூடம் ஆகியவை விடியா திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் பராமரிப்பின்றிக் கிடப்பதாக பக்தர்கள் புகார் குரல் எழுப்பி வருகின்றனர்.
சிவன் கோயில் சொத்தை அபகரித்தால் குலநாசம் ஏற்படும் என்று இந்த ஒரு பக்தர் மட்டுமல்ல, சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வர திருக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுமே சாபம் இடுகின்றனர்.
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாதம்தோறும் லட்சக்கணக்கில் கோயிலுக்கு காணிக்கைகள் வந்தபோது, திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், அன்னதானக் கூடத்தின் பராமரிப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
இந்த திருக்கோயிலின் குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதோடு, மீன்களும் செத்து மிதக்கின்றன. குளத்தை சுற்றிலும் முட்புதர்களாக அடர்ந்து காணப்படுகிறது. முறையான சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் மதுபாட்டில் உள்பட பல்வேறு கழிவுப் பொருட்களையும் இந்தப் பகுதியில் வீசிச் செல்கின்றனர்.
தெப்பக்குளத்தை சுற்றிலும் மதில் சுவர் அமைப்பதற்காக 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதேபோல் அன்னதானக் கூடமும் முறையாக பராமரிப்பின்றி இருப்பதோடு, கழிவு நீரும் சூழ்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்னதான அனுமதி சீட்டை முறையாக வழங்காமல் விரட்டியடிப்பதாகவும், வழங்கக்கூடிய உணவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.
கோயில் குளத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும் அறநிலையத்துறை நிர்வாகம், அதற்குரிய வசதிகள் எதையும் செய்து தரவில்லை என்றும் புகார் வாசிக்கப்படுகிறது.
அமைச்சராகவும் கோயில் அமைந்துள்ள பகுதியின் திமுக மாவட்ட செயலாளராகவும் இருக்கும் சேகர்பாபு, பழமை வாய்ந்த இந்த கோயில் தொடர்பான பக்தர்களின் குறைகளை காது கொடுத்துக்கூட கேட்பதில்லை என்கிறார்கள். சுற்றுப்பயணம் செல்வதாக கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடும் அமைச்சர், உள்ளூரில் உள்ள கோயிலின் தெப்பக்குளம் அன்னதான கூடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.