144 தடை உத்தரவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இன்று அமல்படுத்தப்பட உள்ள 144 தடை உத்தரவு விவரங்களை தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் வரும் 26ஆம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், அனைத்து கல்லூரி, வேலைவாய்ப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளது.

காய்கறிகள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் கிடங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என்றும் குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர அரசு அலுவலங்கள் அனைத்தும் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனையகங்கள், அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்படுவதாகவும், டீ விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூட அனுமதியில்லை என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை தீவன விற்பனை நிலையங்கள், பால் பூத்துகள், வங்கி ஏடிஎம்கள், ஊடக அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் உணவகங்கள், உணவு தயாரிப்புக் கூடங்கள், பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அனைவரும் குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் இயங்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீதிமன்றம் உள்ளிட்ட அத்தியாவசிய 15 அரசுத்துறை நிறுவனங்கள் மட்டுமே செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மருத்துவம் தவிர மற்ற அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஆம்புலன்ஸ், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு சேவை வாகனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள், அரசுப் பணிகளுக்கு மட்டும் அரசு வாகனங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதிக்கு முன் திட்டமிடப்பட்ட திருமணங்கள் மட்டுமே, மண்டபங்களில் நடக்க வேண்டும் என்றும் திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதித்துள்ளது.

Exit mobile version