வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும் பதிமூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில், செப்டம்பர் 9 மற்றும் 23-ம் தேதிகளிலும், அக்டோபர் 7 மற்றும் 14-ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமும் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, 13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 99 ஆயிரத்து 458 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 960 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பெயர் நீக்கம், பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Discussion about this post