காவிரியில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் வரும் , நீரின் அளவு 28 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டின. இதனால் இரு அணைகளிலும் இருந்து வினாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது.
இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் 13 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 13 ஆவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.