ஆயிரத்து 350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை நிலம், சதுப்பு நிலம் அல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அடமானமாக வைத்து, ஆக்ஸிஸ் வங்கியில் சட்ட விரோதமாக 1,350 கோடி ரூபாய் கடன் பெற முயற்சிப்பதாகக் கூறி, சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்னி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சதுப்பு நிலத்தை அடமானம் வைக்கும் வகையில் பத்திரப்பதிவு செய்யவோ அல்லது தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடவோ இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜ மாணிக்கம் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அடமானம் வைக்கப்பட உள்ள இந்த நிலம் சதுப்பு நிலம் அல்ல என வனத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர்.மேலும், சைதாபேட்டை பத்திர பதிவு அலுவலகத்தில் இருந்த இந்த நிலத்தின் பத்திரம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,வழக்கின் விசாரணையை டிசம்பர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் மனுதாரர் தன்னுடைய அறக்கட்டளை தொடர்பான ஆவணங்கள், வீட்டு முகவரி மற்றும் ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
Discussion about this post