சென்னை ஆதம்பாக்கம் அருகே 13 வயது சிறுமி குத்தி கொலை

சென்னை ஆதம்பாக்கம் அருகே 13 வயது சிறுமி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சொத்திற்காக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 109வது சந்தில் வசித்து வருபவர் வேதவல்லி. இவரது தம்பி மகள் சோபனா வயது 13. சோபனாவின் பெற்றோர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் 10 ஆண்டுகளாக வேதவல்லி தான் சோபனாவை வளர்த்து வந்துள்ளார்.

வேதவல்லி மற்றும் அவரது மகன் உடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று வேதவல்லி காலை வீட்டு வேலைக்கு சென்றிருந்த போது அவரது மகன் பாபு வீட்டிற்கு வந்து தனியாக இருந்த சோபனாவை உடல் முழுவதும் பல இடங்களில் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிதாக கூறப்படுகிறது.

காலை 11 மணியளவில் சோபனாவின் சகோதரி மோனிஷா வந்து பார்த்த போது சோபனா ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சோபனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், மடிப்பாக்கம் உதவி ஆணையர் சவுரிநாதன், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து ஷோபனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வேதவல்லியின் முத்த மகன் பாபு, வீட்டை தனக்கு வேண்டும் என்று கேட்டு தாய் வேதவல்லியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், ஆனால் சிறுமி ஷோபனா இருப்பதால் இந்த வீட்டை யாருக்கும் தரமுடியாது என்று வேதவல்லி கூறியதாகவும் தெரிகிறது.

எனவே வீட்டை கேட்டு தாயிடம் தகராறு செய்து வந்த பாபு, வீட்டில் தனியாக இருந்த ஷோபனாவை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்து இருப்பது விசாரனையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர், தப்பி ஓடிய பாபுவை தேடி வருகின்றனர். மேலும் ஷோபனா வீட்டில் தனியாக இருந்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதா? என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் தெரியவரும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆதம்பாக்கத்தில் பட்டப்பகலில் சிறுமி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Exit mobile version