தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமலேயே வருகிற 7 தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளது, விடியா ஆட்சியில் கல்வித்துறையின் அவலத்தை தோலுரித்து தொங்க விட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக பள்ளிக்கல்வி துறையும், தமிழக அரசும் பல்வேறு விளம்பரங்களையும், வெற்று அறிவிப்புகளையும் வெளியிட்டு வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்க இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் இருப்பதே தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதற்கு காரணம் என்கின்றனர் ஆசிரியர் சங்கங்கள். குறிப்பாக ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், பணி மாறுதல் பெறும் தலைமை ஆசிரியர்களின் நிலவரத்திற்கு ஏற்ப அந்தப் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக பள்ளிக்கல்வித்துறை காலம் தாமதித்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி எத்தனை முறை பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கூட நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள். மேலும், தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு வர விரும்பும் ஆசிரியர்களிடம், 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறுவதற்காகவே இதுபோன்று காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக ஆசிரியர் பணி மாறுதலுக்கு லஞ்சப் பணம் வசூல் செய்வதற்கென்றே அமைச்சரின் நெருங்கிய நண்பர் ஒருவர் நியமிக்கப்பட்டு, கோட்டூர் புரத்தில் அலுவலகம் அமைத்து பணி மாறுதலுக்கு லஞ்ச பணம் வசூல் செய்து பணி மாறுதல் அளித்து வருவதாகவும், லஞ்சம் பெறவேண்டும் என்ற காரணத்தாலேயே தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்து கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் அந்த பணிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.