பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே மனமே!
பெண் யார்?
பெற்றுக்கொண்டால் மகள்
பெறாதவரையில்
பிரகாசமான இருள்
வேறொன்றுமில்லை.
– கவிஞர் பிரான்சிஸ் கிருபா
இன்றைக்கு உலகம் முழுக்க மகளிர் தினமானது கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. மகளிர் தினமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து எழுந்துவந்தது. பின்னர் இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் 15,000 பெண் தொழிலாளர்கள் வேலை நேர குறைப்பு, ஊதியம் அதிகரிப்பு மற்றும் வாக்களிக்கும் உரிமை போன்றவற்றிற்காக போராடி அதனைப் பெற்றனர். இதனால் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியானது ஒரு வருடம் கழித்து தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த தினத்தை தேசிய அளவிற்கு நிறுத்திவிடக்கூடாது. சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் என்று கிளாரா ஜெட்கின் என்கிற பெண்நல ஆர்வலர் எண்ணினார். இதனால் 1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை பரிந்துரைத்தார். அம்மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். பிறகு அதிலிருந்து அடுத்த ஆண்டான 1911ல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் மகளிர் தினமானது கொண்டாடப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மகளிர் தினத்தின் 111 வது ஆண்டு ஆகும்.
மார்ச் 8 மகளிர் தினமாக கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்த நாடு ரஷ்யா. 1917இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை . அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் மகளிர் தினமானது அரசு விடுமுறையாகும். ரஷ்யாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் அரசு விடுமுறைதான். அமெரிக்காவில் மார்ச் மாதம் மகளிர் வரலாற்று மாதமாகுமாம்.