சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாலை நேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், சென்னையில் 15 மண்டலங்களில் நாள்தோறும் 30 மாலை நேர மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
இந்த முகாம்கள் மூலம் இம்மாதம் 10-ம் தேதி வரை 1,107 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து நகராட்சி, நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு, பேரூராட்சிகளின் இயக்கம், ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.