அரசுப் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
இரண்டு நாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிலர், அரசு பள்ளிகளில் படிக்கும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் மதிய உணவு சாப்பிடுவது கிடையாது என்றும், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது எனவும், எனவே 11 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கு கல்வித் துறை நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளிகளில் காவலர்கள் கிடையாது, துப்புரவு பணியாளர்கள் கிடையாது என்றும், குறிப்பாக அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகப் பெரும் பிரச்சனை ஏற்படுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டினர்.
10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
Discussion about this post