நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தை தணிக்க மழை வேண்டி காளியம்மனுக்கு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆயிரத்து 8 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தற்பொழுது கடும் கோடை வெப்பம் நிலவி வருவதால் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வறட்சியை போக்கவும், மழை வேண்டியும் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோவிலில் காளியம்மனுக்கு ஆயிரத்து 8 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக வரிசையாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இளநீர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதணை செய்யப்பட்டு பின்னர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.