1,000 சதுரங்க வேட்டை வரலாம்… ஆனாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்…

சென்னையில் பேராசை காரணமாக தன்னுடைய சேமிப்பு மொத்ததையும் மோசடி கும்பலிடம் இழந்து நிற்கிறார் ஒரு பெண். யார் அவர் பார்க்கலாம்.

சென்னை மவுண்ட் ரோடு மலிவு விலைக்கு வருகிறது என்று சொன்னால் கூட அதை நம்பியும் பணம் கட்டி ஏமாறுபவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. அப்படி ஏமாந்து நிற்கும் ஒருவர் தான் சென்னையை சேர்ந்த சரிதா. தனது அதீத ஆசையால் தன் சேமிப்பு முழுவதையும் தொலைத்து விட்டு நடுரோட்டிற்கு வந்துள்ளார் இவர்.

35 வயதாகும் சரிதா, கொளத்தூர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 9ஆம் தேதி துணி வாங்க வந்த 2 பேர், தங்களிடம் சில தங்க குண்டுமணிகள் இருப்பதாகவும் அதை விற்றுத்தரும் படியும் கூறியுள்ளனர். குறைந்த அளவு பணம் கிடைத்தால்கூட போதும் என்று ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த சரிதாவின் ஆசைத்தீயில் ஆயிலை ஊற்றியுள்ளனர்.

சரிதாவின் ஆசை பேராசையாக கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. தங்க மணிகளை வாங்கி, கடையில் சென்று சோதித்தார். அனைத்தும் அக்மார்க் தங்கம். அதனை நல்ல விலைக்கு விற்று விட்டு சொற்ப பணத்தை மட்டும் துணி எடுக்க வந்தவர்களிடம் கொடுத்துள்ளார் சரிதா. இழிச்சவாயன்கள் என்று மனதுள் சிரித்து கொண்டார். ஆனால், இழிச்சவாயன் யார் என்பதற்கான விடை அடுத்த நாள்தான் தெரியவந்தது.

தங்க குண்டுமணி கும்பல், மீண்டும் சரிதாவின் கடைக்கு வந்தது. தங்களிடம் ஏராளமான தங்க குண்டு மணிகள் இருப்பதாகம் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த நகையை வைத்து கொண்டு 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் கூட போதும் என்று கூறியுள்ளது. ஆனால் சரிதா தன்னிடம் 5 லட்சம் மட்டுமே உள்ளது என்று கையை பிசைந்துள்ளார். இருப்பதை கொடுத்தால் கூட போதும் என அந்தக் கும்பல் ஏகத்துக்கும் இறங்கி வந்தது.

இந்த இடத்திலாவது சரிதாவின் மூளை விழித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஆசை அவர் மூளையை மறைத்தது. குண்டு மணிகளை வாங்கினார். ஆனால் சோதிக்கவில்லை. நேற்று சோதித்ததுதானே என்று நினைத்து தனது வங்கிக் கணக்கை வழித்தெடுத்து 4 லட்சத்து 74 ரூபாய் பணம் மற்றும் தன் கையில் அணிந்திருந்த 3 சவரன் வளையல் ஆகியவற்றை குண்டுமணி கும்பலுக்கு தாரை வார்த்தார்.

பின் அதனை கடைக்கு சென்று சோதித்த போது அவை தங்க குண்டுமணிகள் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சரிதா போலிசில் புகார் அளித்தார். அதன் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சரிதாவை போன்றவர்கள் ஒரு சதுரங்க வேட்டை இல்லை ஆயிரம் சதுரங்க வேட்டை வந்தாலும் திருந்த மாட்டார்கள். தலையெழுத்து.

 

Exit mobile version