மழைநீர் வடிகால் பணிக்காக பல இடங்களில் ஐம்பது முதல் நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டி சாய்த்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருடர்களைப் போல நள்ளிரவில் வந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
விடியா ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்காக எனக் கூறி பல நூறு ஆண்டுகள் வாய்ந்த மரத்தை இப்படி அநியாயமாக வெட்டி சாய்த்துள்ளனர்.
சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் அபிராமிபுரம் செயிண்ட் மேரி சாலையில், சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தைச் சுற்றி 50 முதல் நூறாண்டுகள் பழமையான மரங்கள் இருக்கின்றன. கொளுத்தி வரும் வெயிலில் மக்களுக்கு நிழற்குடைகள் போல இருந்த இந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இடையூறாக இருக்கும் மரங்களை பொதுமக்கள், பகுதி வாசிகள், இயற்கை ஆர்வலர்கள் ஒப்புதலின்றி வெட்டி வீசி வருகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.
பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், இப்பணிகளுக்காக வடமாநிலத்தவரை நியமித்துள்ளதால், அவர்களிடம் இப்பகுதிவாசிகள் சொல்வது எதுவும் எடுபடுவதில்லை. அதிலும் பொதுமக்கள் கேள்வி எழுப்புவதால், இரவு 10 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை திருடர்களைப் போல வந்து மரங்களை வெட்டி சாய்த்து செல்கின்றனர்.
மேலும், அபிராமிபுரத்தின் அடையாளமாக கருதப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்தையும் துண்டு துண்டாக வெட்டி அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்த பகுதிவாசிகள், பழமையான மரங்களை வேரோடு வெட்டி சாய்க்காமல் வெளிநாடுகளில் செய்வதுபோல வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால், இவற்றை சட்டை செய்யாத அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் நடவடிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை அவ்வப்போது மூடாமல், பணிகளையும் மந்த நிலையில் செய்து வருவதால் இப்பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்படுகிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெட்டப்பட்ட மரங்களை கவனத்தில் கொண்டு இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.