சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்திற்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுச்சேரியில் 2022-2023 ஆம் நிதியாண்டில் ரூபாய் 1,08,364 கோடி வருமான வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1,05,300 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், வரி வசூல் ரூபாய் 3000 கோடி அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகம். இந்திய அளவில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிஉத்துள்ளோம் என்று பேசினார்.
மேலும் ”வருமான வரியை சரியாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிப்பது முன்னர் சவாலாக இருந்தது. ஆனால் இப்போடு சுலபமாக கண்டுபிடித்து விடுவோம். 30 லட்சத்திற்கு மேல் இடம் வாங்கினால், 10 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் வைத்திருந்தால், 2 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினால் கண்காணிக்கப்படுவார்கள்” என்று தலைமை ஆணையர் இரவிச்சந்திரன் ராமசாமி தெரிவித்தார்.
டிடிஎஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வருமான வரித்துறை சார்பில் முதல்முறையாக தமிழில் கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இதன் நகல் இணையதளத்திலும் வெளியிடப்படும்.மேலும் வருமான வரி நடைமுறைகள் குறித்து விளக்கமளிக்க 16 தலைப்புகளில் காணொளிகள் தயாரிக்கப்பட்டு tnincometax.gov.in என்னும் வருமான வரி இணையதளத்திலும், youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 என்ற வலையொளி தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.