மோட்டார் வாகன சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒருவராக இருந்தாலும், இருவராக இருந்தாலும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியும் உள்ளது.
இதை அமல்படுத்த வேண்டும் என கொரட்டூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கின் மீதான மறு விசாரணை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.
இந்தநிலையில், இதன் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. அதில், ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.