ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா உள்ளிட்ட சில பகுதிகளில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளதாக கருதப்படும் அன்சர் கஸ்வத் உல்-ஹிந்த் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி ஜகிர் மூசா என்பவரை பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் அடைக்கப்பட்டு, சில இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும்பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர், குல்காம், புல்வாமா ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே 2-வது நாளாக இன்றும் இந்தப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கு பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.