தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தநிலையில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மேகாலயா மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது. இந்தக் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தைச் சேர்ந்த டாக்டர் சதீஸ் மற்றும் வரலட்சுமி ஆகியோர் இடம் பெற்றனர்.
இந்தநிலையில், தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த குழுவினர், உப்பாற்று ஓடைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டுள்ள பகுதியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை தூத்துக்குடி சிப்காட் வளாகப் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்றனர். அங்குள்ள, இயந்திரப் பகுதிகள், தாமிரத் தாது மற்றும் பிற ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் மாசுக் கட்டுபாட்டு வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்விற்குப் பிறகு, குமரெட்டியபுரத்திற்கு சென்ற ஆய்வுக் குழுவினர் அங்குள்ள பொதுமக்களை சந்தித்தனர். இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பொதுமக்களைச் சந்தித்த ஆய்வு குழுவினர், அவர்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால், பெரும்பான்மையான மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தெரிவித்தார். ஆலை மீண்டும் செயல்படக் கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.
சென்னையில் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாகவும், விரைவில் தங்களது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தருண் அகர்வால் தெரிவித்தார். தேவை ஏற்பட்டால், ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post