தமிழ்நாட்டில் 2017 – 2018 ஆம் நிதி ஆண்டில், வேலை வாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல் படுத்தியதற்காக, தமிழக அரசுக்கு டெல்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது வழங்கப்பட்டது. இதனை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசைக் கவிழ்க்க திமுக எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து வருவதாகக் கூறினார். முதலமைச்சர், துணை முதலமைச்சரைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மீதும் திமுக குற்றம்சாட்டி வருவதாக அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும், கட்சியை முடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தவறான கருத்துக்களை எதிர்கட்சிகள் கூறி வருகின்றன என்றார் அவர். உள்ளாட்சித் துறையை மீறி எந்த டெண்டரும் வழங்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர், தம் மீதான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அரசியலை விட்டு விலக தயார் என்றும் தெரிவித்தார். அப்படி நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் திமுக தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா எனவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சவால் விடுத்தார்.
Discussion about this post