வெற்றுக்காலில் ஓட்டப்பந்தய களத்தில் தன் வாழ்க்கையை துவங்கி இன்று அவர் பெயரிலேயே தனியே ஒரு ஷு பிராண்ட் உருவாக்கப்படும் அளவுக்கு உயர்ந்த ஹீமா தாசின் வாழ்க்கை, விளையாட்டு துறையில் தடம் பதிக்க துடிக்கும் அனைவருக்கும் உத்வேகமூட்டுவதாய் அமைந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான அஸ்ஸாம் மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான டிங்(DHING) நகரம் அருகே கந்துலிமாரி கிராமத்தில் 2000-ம் ஆண்டு பிறந்தவர் ஹீமா தாஸ். விவசாய குடும்பத்தில் ஐந்தாவது குழந்தையாக பிறந்த ஹீமா தாசுக்கு வறுமையே பரிசாக கிடைத்தது.
டிங் அரசுப்பள்ளியில் சேர்ந்த ஹீமா தாஸ் முதலில் ஆர்வம் காட்டியது கால்பந்தில் தான். ஆனால் இந்தியாவில் மகளிர் கால்பந்தில் பெரிய அளவு ஜொலிக்க வாய்ப்பில்லை என்று அவரது உடற்கல்வி ஆசிரியர் தடகளம் பக்கம் ஹீமா தாசை மடைமாற்றம் செய்தார்.
அன்று அவர் செய்த அந்த வழிகாட்டல் தான், இன்ற இந்தியாவுக்கு தடகளத்தில் தங்கம் கிடைக்கச் செய்துள்ளது. அஸ்ஸாமின் கரடுமுரடான சாலைகளில் வெறுங்காலுடன் பயிற்சியில் ஈடுபட்டார் ஹீமா தாஸ். அன்று காலணியை வாங்கக் கூட முடியாத நிலையில் தான் பயிற்சிகளை மேற்கொண்டார்.
அந்த கடும்பயிற்சி தான் பின்லாந்து நாட்டின் டாம்ப்ரே நகரில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெற காரணமாக அமைந்தது. அதுமட்டுமல்ல, இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி வென்று அசத்தினார் ஹீமா தாஸ்.
அவரது சாதனைகளுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. அன்று ஷு கூட வாங்க முடியாமல் வெறுங்காலுடன் ஓடிய ஹீமா தாசை கவுரவப்படுத்தும் விதமாக ஜெர்மனியின் அடிடாஸ் நிறுவனம், தமது நிறுவனத்தின் விளம்பர தூதராக ஹீமா தாசை நியமித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹீமா தாஸ் பெயர் பொறித்த ஷு-வையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
இலக்கு மாறாத உழைப்பும், உண்மையும் இருந்தால் வெற்றிச் சிகரங்களின் படிக்கட்டுக்கள் உங்கள் பாதங்களை தேடி வரும் என்பதற்கு ஹீமா தாசின் வாழ்க்கை ஒரு உதாரணமாகும்.