பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் மீது பழி போடப்படுவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில்பட்டி அருகேயுள்ள வள்ளுவர் நகர் சித்தி விநாயகர் கோவிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில், அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். ஜி.எஸ்.டி. கொண்டு வந்தபோது மாநில அரசுகளை மத்திய அரசு கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்த அமைச்சர், எந்த பொருளையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசுக்குதான் அதிகாரம் உள்ளது என்றார். பெட்ரோல், டீசல் விலை உயர்வில், எதிர்ப்பினை சமாளிக்க முடியாமல் மாநில அரசுகள் மீது பழி போடுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.