2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு வெளிநாட்டு மொழிப்படங்கள் பிரிவில் கலந்துகொள்வதற்காக ராஸி, பத்மாவத், வில்லேஜ் ராக்ஸ்டார், ஹிச்சி, லவ் சோனியா, குலாப்ஜாம், மகாநடி, பேட்மேன் போன்ற 28 இந்தியப் படங்கள் நேற்று மும்பையில் திரையிடப்பட்டன. இதைப் பார்த்த தேசிய திரைப்பட கூட்டமைப்பு இறுதியில் அஸ்ஸாமி மொழிப்படமான வில்லேஜ் ராக்ஸ்டாரை (Village Rockstars) ஆஸ்கர் தேர்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
அடிப்படை வசதிகள் அதிகம் இல்லாத அஸ்ஸாமில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழும் சிறுமி, தான் ஒரு கிதார் (Guitar) வாசிப்பாளராக ஆகி தன் கிராமத்தில் ஓர் இசைக் குழுவை உருவாக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டவள். சிறிய கிராமத்தில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் தன் கனவை எட்டினாரா என்பதுதான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது.
ரிமா தாஸ் என்பவர் எழுதி, இயக்கி, தயாரித்த இந்தப் படம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. முன்னதாக வில்லேஜ் ராக்ஸ்டார் படம் சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த எடிட்டிங், சிறந்த ஃபீச்சர் ஃபிலிம் (Best Feature Film) சிறந்த கலை பங்களிப்பு போன்ற நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.