விஜயை விட்டு வைக்காத முதலமைச்சர் ஆசை!?

கொள்கை, கோட்பாடு, லட்சியம் என வாழ்ந்து படிப்படியாக முன்னேறி அரசியலில் பெரும் ஆளுமையாக மாறிய தலைவர்கள் பலர்.

ஆனால் இன்று திரைபிரபலமும், விசில் அடிக்க நான்கு ரசிகர்களும் இருந்தால் போதும் கோட்டை பிடித்து விடலாம் என தப்பு கணக்கு போடுகின்றனர் சில நடிகர்கள்.

அந்த வரிசையில் நடிகர் விஜய்யும் இணைந்து விட்டாரோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அரசியலுக்கு வந்து விட்டேன் என கமல் கூறிய நிலையில், அரசியலுக்கு வர இருக்கிறேன் என ரஜினி சொல்லி வருகிறார்.

இந்நிலையில் வந்தாலும் வருவேன் என்கிற பாணியில் கருத்து தெரிவித்திருக்கிறார் விஜய் . சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜயை பார்த்து, நிகழ்ச்சி தொகுப்பாளர் நீங்கள் முதலமைச்சர் ஆனால் எதை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த விஜய், லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும், அதை ஒழிக்க முடியுமா என தெரியவில்லை என்கிறார். ஆனால் ஒழிக்க வேண்டும் என்கிறார். அவர் திட்டவட்டமாக ஒரு கருத்தை கூறவில்லை.

கருணாநிதியின் உறவினரான கலாநிதி மாறன் தயாரிக்கும் திரைப்படத்தின் விழா மேடையில் நின்று கொண்டு, ஊழலை ஒழிப்பேன் என அவர் கூறியது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

போதா குறையாக, தலைவர்கள் ஊழல் அற்றவர்களாக இருந்தால் தான் கீழே உள்ளவர்களும் ஊழல் அற்றவர்களாக இருப்பார்கள் என்றும் யாரையோ மறைமுகமாக குறிப்பிடுகிறார்.

2 ஜி வழக்கில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பெற்ற வழக்கில் மாறன் சகோதரர்கள் இன்றும் நீதிமன்றம் சென்று வருகின்றனர். இவர்களையெல்லாம் குறிப்பிட்டுத் தான் விஜய் அப்படி பேசினாரா எனத் தெரியவில்லை.

Exit mobile version