விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு சலுகை!

ஐந்து வயதுடைய குழந்தைகளை கண்டறிந்து விஜயதசமி அன்று அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ளது.

அதில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் 14 வகை நலத்திட்டங்கள் குறித்த விவரங்களைப் பெற்றோர்கள் அறியும் வகையில், ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் கூட்டங்கள் நடத்தி, விஜயதசமி அன்று 5 வயதுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

குறிப்பாக, அடுத்த மாதம் 19 ஆம் தேதி விஜயதசமி நாளன்று பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் வருகை புரியும்போது, அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் என்றும், அன்றைய தினமே குழந்தைகளுக்கு விலையில்லா பாடநூல், விலையில்லா சீருடை போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும், விஜயதசமி அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version