வந்தவாசியில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் 36 விநாயகர் சிலைகளுடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மாற்றுப்பாதை வழியாக ஒரு விநாயகர் சிலை செல்ல முயற்சித்ததாக தெரிகிறது. இதையடுத்து, இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்கள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தவாசி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இருதரப்பினரிடையே வெடித்த மோதலால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.