லாரி வாடகை 25 சதவீதம் உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

 

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 25 சதவீத லாரி வாடகை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 13 காசுகளுக்கும், டீசல் விலை 78 ரூபாய் 36 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகளும், டீசல் விலை 10 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருவதால், லாரிகளுக்கான சரக்கு வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சரக்கு கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு லாரி சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனத்தின் மாநில தலைவர் ராஜவடிவேல், டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறினார்.

சரக்கு கட்டண உயர்வால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version