நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றி, ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று முதல் தொடங்கியுள்ளது. வேலைநிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் நான்கரை லட்சம் கனரக வாகனங்களும், ஒன்றரை லட்சம் மினி வேன்களும் இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.