கனமழை தொடர்பாக பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே ரெட் அலர்ட் போன்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது என வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்து உள்ளார்.
கனமழை தொடர்பான எச்சரிக்கைகள் ரெட் அலர்ட், ஆம்பர் அலர்ட், மஞ்சள் அலர்ட், பச்சை அலர்ட் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என கணக்கிடப்படுவது ரெட் அலர்ட் என அறிவிக்கப்படுகிறது.
ரெட் அலர்ட் விடுக்கும்போது, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு, சாலை வசதிகள் துண்டிக்கப்படும்.
அடுத்ததாக ஆம்பர் என்ற அலர்ட் முறை கணக்கிடப்படுகிறது. இந்த எச்சரிக்கையின்போது வானிலை மோசமடைய அதிக வாய்ப்புள்ளதாகவும், சாலை, மின் இணைப்பு ஒரு சில இடங்களில் துண்டிக்கப்படும் எனவும் இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.
இதேபோல், அடுத்த சில நாட்களில் வானிலை மோசமாக வாய்ப்பு உள்ளது என்பதை எச்சரிக்கும் வகையில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும்.
அடுத்ததாக எந்த எச்சரிக்கையும் கிடையாது என்பதை விளக்கும் அறிவிப்பு பச்சை அலர்ட் ஆகும்.
இது குறித்து வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:-
“ரெட் அலர்ட் குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம். முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதாலேயே இது போன்ற எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் 7 ஆம் தேதிக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. வெள்ள பாதிப்பு இடங்கள் கண்டறியபட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க குழுக்கள் அமைக்கபட்டு உள்ளன.
பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு புயலால் எந்த பாதிப்பும் இல்லை என கூறி உள்ளார்.
கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொடர்பு எண்கள் விவரங்கள் வருமாறு:-
காஞ்சிபுரம்- 1077, 044 27237107, 27237207,
தாம்பரம்- 044 22410050
வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவிக்க தொடர்பு எண்கள் விவரங்கள் வருமாறு:-
காஞ்சிபுரம்-9445051077
தாம்பரம்- 9445071077