தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பல்வேறு கோட்டங்களுக்குப் புதிதாக வாங்கப்பட்டுள்ள 370 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களுக்காக 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்காக 109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 370 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். அப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.
புதிதாக வாங்கப்பட்டுள்ள 370 பேருந்துகளில் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 65 பேருந்துகளும், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 30 பேருந்துகளும் வழங்கப்படுகின்றன. கோவை கோட்டத்துக்கு 104 பேருந்துகளும், சேலம் கோட்டத்துக்கு 57 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்துக்கு 41 பேருந்துகளும், விழுப்புரம் கோட்டத்துக்கு 27 பேருந்துகளும் வழங்கப்படுகின்றன. திருநெல்வேலி கோட்டத்துக்கு 26 பேருந்துகளும், மதுரைக் கோட்டத்துக்கு 20 பேருந்துகளும் வழங்கப்படுகின்றன.