பெரும் பணக்காரர்களின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருப்பதற்கு, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக்கடன்கள் தள்ளுபடி செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். சாமானியர்களின் பணத்தை அரசு வீணடித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வாராக் கடன்களை வரவு-செலவு கணக்கு அறிக்கையில் இருந்து நீக்குவது பொதுத்துறை வங்கிகள் கடைபிடிக்கும் நடைமுறை என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் இது தள்ளுபடி கிடையாது என்றும், கடனை பெற்றவர்கள், அதை திருப்பிச் செலுத்தி வேண்டியது அவசியம் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நீக்கப்பட்ட வாராக்கடன்களில் ரூ.36 ஆயிரத்து 551 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார்.