மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்தியா அபார வெற்றி

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 

இந்தியா – மேற்கு இந்திய தீவுகளின் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்களை குவித்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா 134 ரன்கள் எடுத்து அசத்தினார். விராத்கோலியும், ரவீந்திர ஜடேஜாவும் சதம் அடித்து இந்திய அணி வலுவான நிலையை எட்டச் செய்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா எட்டிய மிகப்பெரிய ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 1979ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 644 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக ரன்களாக இருந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட், கீரன் பவெலை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காலி செய்தார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் மிரண்டு மேற்கு இந்திய தீவுகள் அணி, 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், குல்தீப், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து பாலோ ஆன் ஆன அந்த அணி 2வது இன்னிங்சை விளையாடியது. பிராத் வொயிட் 10 ரன்களில் அஸ்வின் சுழலில் பிருத்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ், 5 விக்கெட்டுகளை சாய்த்து, இந்தியாவின வெற்றிக்கு வழி வகுத்தார். மேற்கு இந்திய தீவுகள் அணிக 196 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 12ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

Exit mobile version