தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று கூறினார். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், கருணாஸ் எம்.எல்.ஏ.வின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், கருணாசின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, தமிழக அரசு மீது ஊழல் குறித்து பேசுவதற்கு திமுக, மற்றும் காங்கிரஸிற்கு தகுதியில்லை என்றும் குறிப்பிட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஆலையை மூடிவிட்டோம் என்றும்; அதனைத் திறக்கக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.