சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி சென்றார். பின்னர் அங்கிருந்து முக்கொம்பு மேலணைக்கு சென்ற அவர், மதகுகள் உடைந்த இடங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், அணைப் பகுதிக்குள் இறங்கிய முதலமைச்சர் பழனிசாமி, சேதமடைந்த மதகுகளை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அதிகளவில் நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டுமென்றும், பணிகளை விரைவாக முடிவுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, முக்கொம்பு அணையின் உடைந்த பகுதிகள் 4 நாட்களில் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலணையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். கேரள அரசு நீர்த்தேக்கும் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே முல்லைப் பெரியாறு அணை மீது பழி சுமத்துவதாக அவர் தெரிவித்தார். கேரளா முழுவதும் அணைகள் திறக்கப்பட்டதால், தான் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.