ரஃபேல் விமான முறைகேடு போன்ற முக்கிய விவகாரங்கள் எழும் போது, பாகிஸ்தான் பிரச்சனையை எழுப்பி பிரதமர் மோடி திசை திருப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, மெஹூல் சோக்ஸி அல்லது நீரவ் மோடி போன்றவர்கள் இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லும் போது, மோடி அரசு பாகிஸ்தானை நினைவுபடுத்துவதாக விமர்சித்தார். தற்போது ரஃபேல் ஊழல் வெளிவந்துள்ளநிலையில், மீண்டும் பாகிஸ்தானை மோடி அரசு பயன்படுத்துவதாக ரன்தீப் குற்றம்சாட்டினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான மீறிய தருணங்களில், பகட்டான தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு எதற்காக மேற்கொண்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். பதன்கோட் விமான தளம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது அழையா விருந்தாளியாக, பிரதமர் எதற்காக பாகிஸ்தான் சென்றார் என்று ரன்தீப் கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாதி புர்ஹான் வானியை, பாதுகாப்புப் படை கொன்றிருக்கக் கூடாது என்று பொதுவெளியில் காஷ்மீர் துணை முதலமைச்சர் நிர்மல் சிங் கூறியது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற பல கேள்விகளுக்கு தேசத்துக்காக தேச நலனுக்காக பிரதமர் பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்று ரன்தீப் சுர்ஜேவாலா கேட்டுக்கொண்டுள்ளார்.