ஆறு மாதத்திற்கு பிறகு காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மீன்பிடித்தடைக் காலம், கப்பல் கவிழ்ந்து கடலில் எண்ணெய் கலந்தது என பல காரணங்களால் கடந்த 6 மாத காலமாக காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்திருந்தது. இந்தநிலையில் மீன்பிடித்தடைக் காலம் முடிந்து, தற்போது காசிமேடு துறைமுகத்திற்கு வரும் மீன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் மீன் வாங்குவதற்கு மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
பொதுவாக 40 முதல் 50 டன்கள் வரை மீன்கள் கிடைக்கும் என கூறும் மீனவர்கள், தற்போது 200 டன்கள் வரை மீன்கள் கிடைத்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மீன்கள் வரத்து அதிகரித்துள்ள போதும், அதற்கான விலை குறைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். ரூ.900-க்கு விற்கப்பட்ட வஞ்சரம் மீன் தற்போது ரூ.600-க்கு விற்கப்படுவதாகவும், ரூ.600-க்கு விற்கப்பட்ட வவல் மீன், தற்போது ரூ.400-க்கு விற்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புரட்டாசி மாதம் தொடங்க இருப்பதால், வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் குறையக்கூடும் என மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.