பிஎஸ்என்எல் இணைப்புகளை சன்டிவிக்கு முறைகேடாக பெற்றுத் தந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதான விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பிஎஸ்என்எல். அதிவேக இணைப்புகளை முறைகேடாக பெற்றுத் தந்தார். இதன்மூலம், அரசுக்கு ஒருகோடியே 79 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து சிபிஜ வழக்கு தாக்கல் செய்து விசாரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு தொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடைபெற்ற விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விசாரணை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.