மழைநீர் சேமிப்புத் திட்டம் – சென்னை மாநகராட்சி தீவிரம்

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்  முறையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

மழைநீர் சேகரிப்பு திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 2003 ஆம் ஆண்டு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இதனால் சென்னையில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் 5.58 மீட்டர் அளவிற்கு உயர்ந்தது. பல ஆண்டுகள் பருவமழை பெய்த போதிலும் சரியாக பெய்யாத போதிலும் நிலத்தடி நீர் பெரிய அளவு கைகொடுத்தது.

தண்ணீர் தட்டுப்பாடு என்பது பெருமளவு குறைக்கப்பட்டு பலரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு சிறந்த திட்டமாக இத்திட்டம் அமைந்தது.

இந்நிலையில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை மீண்டும் சீரிய முறையில் செயல்படுத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதற்காக சென்னையில் மட்டும் புதிதாகக் கட்டப்பட்ட 9 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அமைக்க வேண்டும் என கட்டாயமாக்க சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது மழைநீர் கட்டமைப்புகள் குறித்த பிரச்சாரம் வாகனம் அமைக்கப்பட்டு,சென்னை குடிநீர் வாரியத்திற்கு உட்பட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்ககூட்டமும் நடைபெற உள்ளது. சிறப்பாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கும் கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிற மாநகராட்சிகளில் 44.56 லட்சம் கட்டிடங்களும், நகராட்சிகளில் 38,86 லட்சம் கட்டிடங்களும் பேரூராட்சிகளில் 26.39 கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய சீரிய நடவடிக்கைகளின் பயன்கள் கோடை காலத்தில் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version