ஏர்செல் -மேக்சிஸ் நிறுவனத்துக்கு, 3,500 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்க துறை முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரம் மற்றும் ப.சிதம்பரம் உள்ளிட்ட 4 பேர் மீது டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்தநிலையில் இன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆகஸ்டு 7ஆம் தேதி வரை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.