“போர்க்குற்ற துரோகத்தில் திமுக” -அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன்

ஈழத் தமிழர்களுக்கு எதிராக திமுக – காங்கிரஸ் கட்சிகள் போர்க் குற்ற துரோகத்தை நிகழ்த்தி உள்ளதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குற்றம்சாட்டி உள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில், சிங்கள ராணுவத்திற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், உதவியதன் மூலமாகப் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால், திமுக – காங்கிரஸ் கட்சியினரை, போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வலியுறுத்தி, திருவள்ளூரில் அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம் பலராமன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பலராமன் தலைமையில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில், அதிமுக கழக அவைத் தலைவர் மதுசூதனன் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஈழத் தமிழர்களுக்கு எதிராக திமுக – காங்கிரஸ் கட்சிகள் போர்க் குற்ற துரோகத்தை நிகழ்த்தி உள்ளதாகப் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில், இந்திய அரசு இலங்கைக்கு உதவி செய்ததின் மூலம், தமிழர்களுக்குப் பச்சை துரோகம் செய்துவிட்டதாகவும் மதுசூதனன் விமர்சனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திமுகவுக்கு எதிரான இந்தக் கண்டன பொதுக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பா.பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version