பொய் சொல்வதற்கு இவ்வளவு போட்டியா? – காங்கிரஸ் கிண்டல்

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா பேசும்போது , ரபேல் போர் விமான பேரத்தில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தை விலக்கி விட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர் என்றார். இந்திய விமானப்படையையோ, பாதுகாப்புத்துறை  அமைச்சரையோ கலந்து பேசாமல், பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பாக , மார்ச் 28-ம் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும் என்றார்.

பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் மவுனம் காப்பதாக கூறிய அவர், ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுவதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

Exit mobile version