ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களைத் தவறாக வழி நடத்தி வருகிறார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டி உள்ளார்.
கேரளாவில் பாஜக மாநில தலைவராக பி.எஸ்.ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டது தொடர்பான கூட்டம் கொச்சியில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், ரோஹிங்யா அகதிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடிபெயர்ந்துள்ளனர் என்றும், அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால், யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார். அத்துடன், ரபேல் விவகாரத்தில் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் மக்கள் அதனை நம்பிவிடுவார்கள் என்று நினைத்து எதிர்க்கட்சிகள் அதனைச் செய்து வருவதாக கவலைத் தெரிவித்தார்.
ரபேல் விவகாரம் பற்றிய உண்மை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தெரியும் என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மக்களைத் தவறாக வழி நடத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு பேச்சுகளை, ராகுல் பேசி வருகிறார் என்றும், அவரது பதவியின் கண்ணியத்திற்குக் கீழ் செல்லாமல், மூத்த தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.