இன்ஸ்டாகிராம் செயலியை உருவாக்கிய கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் ஆகியோர் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளனர்.
உலகம் முழுவதும் இளைஞர்களை கவர்ந்துள்ள செயலிகளில் இன்ஸ்டாகிராம் முக்கியமான ஒன்று.
இதனை 2010-ம் ஆண்டு கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் என்ற இரண்டு இளைஞர்கள் உருவாக்கினர்.
பின்னர் 2012-ம் ஆண்டு இதனை ஒரு பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்பனை செய்தனர். பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்பனை செய்தாலும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரிகளாக இவர்கள் இருவரும் தான் விளங்கினர்.
இந்த சூழ்நிலையில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக இருவரும் அறிவித்துள்ளனர். விலகலுக்கான அதிகாரபூர்வ காரணம் இதுவரை வெளிப்படையாக சொல்லப்படவில்லை.
இருந்தாலும் மீண்டும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான தருணம் இதுவென்று கெவின் சிஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். ஒரு பில்லியன் பயனாளிகள் மற்றும் 2 மில்லியன் விளம்பரதாரர்களை கொண்டது இன்ஸ்டாகிராம் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.