பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில மாதங்களாக பெட்ரோல். டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது, இதை செய்வது தங்களுடைய வேலை கிடையாது என நீதிபதிகள் கூறினர். இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதேசமயம் பெட்ரோல் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.